டி20 உலகக் கோப்பை தொடரை வைத்து பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்; ஐபிஎல் வீரர்களுக்கு செக்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா - கனாடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த ஓராண்டு காலமாக இந்திய டி20 அணியைப் பொறுத்தவரையில் பல்வேறு வீரர்கள் பரிசோதனை முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பெரும்பாலான வீரர்கள் தங்கள் திறனை நிரூபித்ததுடன், தேர்வாளர்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளனர். இதனால் தான் எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களைத் தேர்வு செய்து, டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி உருவாக்கப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
ஏனெனில் உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறும் நிலையில், ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் இறுதிவரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாகவே ஐபிஎல் தொடரை கணக்கில் கொண்டு தேர்வாளர்கள் வீரர்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்நிலையில், நேற்றைய தினம் பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் ஒன்று வெளியானது.
அந்த தகவலின் படி, டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் விளையாடும் ஐபிஎல் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத பட்சத்தில் அவர் முன்கூட்டியே உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க அமெரிக்கா செல்வார்கள் என்றும், பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் வீரர்கள் பின்னர் இந்திய அணியுடன் இணைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் ஓய்வின்றி விளையாடும் சூழல் உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.