ராகுலைத் தொடர்ந்து மற்றுமொரு வீரர் காயம்; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

Updated: Tue, May 02 2023 14:48 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் நேற்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. இருப்பினும் அந்த போட்டியின் ஆரம்பத்திலேயே லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஒரு பவுண்டரியை தடுப்பதற்காக வேகமாக ஓடிய போது துரதிஷ்டவசமாக தசை பிடிப்பு காயத்தை சந்தித்தார். அதனால் ஏற்பட்ட காயத்தால் அதிகப்படியான வலியால் தவித்த அவர் மருத்துவரின் முதல் உதவிக்கு பின் மிகவும் போராட்டமாக எழுந்து நடந்து இப்போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

என்ன தான் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் தடுமாற்றமாக செயல்பட்டு வந்தாலும் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தும் திறமை கொண்ட அவர் இப்போட்டியில் காயமடைந்தது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒருவராக அவரும் தேர்வாகியுள்ளார்.

அப்போட்டியில் அனுபவமற்ற கேஎஸ் பரத்துக்கு பதிலாக விக்கெட் கீப்பராக அல்லது ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே தொடக்க வீரராக களமிறங்கி 2 சதங்களை அடித்து நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் இறுதிப்போட்டியில் விளையாடாமல் போனால் நிச்சயமாக அது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாகவே அமையும் என்பதில் சந்தேமில்லை. தற்போதைய நிலைமையில் காயம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தால் மட்டுமே இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது தெரிய வரும். 

இருப்பினும் அந்த போட்டியின் கடைசி நேரத்தில் அவர் பேட்டி செய்ய வந்தது நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. அந்த நிலைமையில் இப்போட்டி துவங்குவதற்கு முந்தைய நாளில் வழக்கம் போல நடைபெற்ற வலைப்பயிற்சியில் லக்னோ அணியில் உள்ள மற்றொரு இந்திய வீரர் ஜெயதேவ் உனத்கட் பந்து வீசி பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பந்தை வீசிய பின் கவனத்தை பேட்ஸ்மேன் மீது வைத்துக்கொண்டே சென்ற அவர் துரதிஷ்டவசமாக தடுமாறி கீழே விழுந்தார். 

அப்படி கீழே விழுந்ததில் அவருடைய இடது கை தோள்பட்டை தரையில் மோதி காயத்தை சந்தித்தது. அதனால் வலியால் தவித்த அவருக்கு லக்னோ அணி மருத்துவ குழுவினர் ஐஸ் பேக் வைத்து தேவையான முதலுதவிகளை கொடுத்தனர். அந்த காயத்தால் இப்போட்டியில் விளையாடாத அதை சோதிப்பதற்காக மும்பைக்கு சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த காயம் பெரிதாக இருக்கும் பட்சத்தில் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தேவையான சிகிச்சைகளை அவர் மேற்கொள்வார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் கடுமையாக போராடி 12 வருடங்கள் கழித்து சமீபத்திய வங்கதேச தொடரில் தன்னுடைய 2ஆவது போட்டியை விளையாடி முதல் விக்கெட்டை பதிவு செய்து அபார கம்பேக் கொடுத்தார். அந்த நிலையில் காயத்தால் வெளியேறிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக அவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

குறிப்பாக ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் என எஞ்சிய அனைவரும் வலது கை வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கும் நிலையில் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதற்காகவே இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் ஸ்பெஷலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரும் இப்படி காயமடைந்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு கவலையை கொடுத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை