ஐபிஎல் 2021: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்; சமாளிக்குமா பிசிசிஐ?

Updated: Mon, May 31 2021 19:30 IST
Image Source: Google

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் போட்டி அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் நடைபெறும் தினத்தில் வெஸ்ட் இண்டீசின் கரீபியன் பிரீமியர் லீக் போட்டி தொடர் நடைபெறும் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில்,“வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சிபிஎல் தொடரை முன்கூட்டியே முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இப்படி முன்கூட்டியே முடிக்கும் பட்சத்தில் வீரர்கள் பயோ பபுள் சூழலில் தனிமைப்படுத்தப்பட்டு, ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவித்தார். 

இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த முக்கிய வீரர்கள் சிலர் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களின் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.

அதன்படி ஐபிஎல் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டுவைன் பிராவோ(சென்னை சூப்பர் கிங்ஸ்), பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்), கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன் (பஞ்சாப் கிங்ஸ்), ஹெட்மயர் (டெல்லி கேபிட்டல்ஸ்), ஜேசன் ஹோல்டர் (சன் ரைசஸ் ஐதராபாத்), சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) உள்ளிட்டவர்கள்  தொடரில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை