பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல்; இஷான் கிசானுக்கு விக்கெட் கீப்பிங் வாய்ப்பு!

Updated: Thu, Jan 11 2024 12:08 IST
பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல்; இஷான் கிசானுக்கு விக்கெட் கீப்பிங் வாய்ப்பு! (Image Source: Google)

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கியதில் இருந்து, டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கேஎஸ் பரத், இஷான் கிஷன் ஆகியோர் விக்கெட் கீப்பராக செயல்பட்ட நிலையில், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் பொறுப்பை ஏற்றார்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டிருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்தார். எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், குறை சொல்லும் அளவிற்கு செயல்படவில்லை. ஏனென்றால் கால் மற்றும் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு திரும்பிய கேஎல் ராகுல், கூடுதல் பொறுப்பிலும் அசத்தியது பாராட்டுகளை பெற்றது.

என்னதான் வெளிநாடுகளில் கேஎல் ராகுல் சிறப்பாக விக்கெட் கீப்பராக செயல்பட்டாலும், இந்திய மண்ணில் ஸ்பின்னர்களின் பந்துகளை பிடிப்பது சாதாரணமல்ல. இதனால் சொந்த மண்ணில் நடக்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

கேஎல் ராகுல் இல்லையென்றால் அடுத்த இடத்தில் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தான் இருக்கிறார். அவர் மன சோர்வு காரணமாக விடுப்பில் இருக்கும் சூழலில், ஜனவரி 19ஆம் தேதி ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் அவர் ஃபார்மை பார்த்த பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இஷான் கிஷனை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இஷான் கிஷன் மீது எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இஷான் கிஷன் முதன்மை விக்கெட் கீப்பராகவும், கேஎல் ராகுல் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகவும் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தனது இடத்தை இழக்கும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை