இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 5ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி டாமி பியூமண்ட்டின் அதிரடியான சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 347 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக டாமி பியூமண்ட் 102 ரன்களையும், ஏமி ஜோன்ஸ் 60 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் ஹான்னா ரோவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 35.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் கேட் கிராஸ், ஹீத்தர் நைட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றதுடன், ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.