ஓய்வு முடிவை திரும்ப பெரும் எண்ணம் இல்லை - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Thu, Jul 27 2023 13:51 IST
Image Source: Google

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற பின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ்.

இதனால் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் களமிறங்குவது பின்னடைவை ஏற்படுத்தும் என்று பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பையையும் பென் ஸ்டோக்ஸ் வென்று கொடுத்ததால், உலகக்கோப்பையில் மட்டும் அவர் களமிறங்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணை வெளியாகியது. இதனால் அனைத்து நாடுகளும் டெஸ்ட் கிரிக்கெட் சீசனை முடித்துக் கொண்டு உலக்கோப்பைத் தொடருக்கு தயாராகும் வகையில் திட்டமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பென் ஸ்டோக்ஸ் பேசும்போது, ஓய்வில் இருந்து மீண்டு வந்து ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பென் ஸ்டோக்ஸ், “நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டேன். அதனை திரும்ப பெறுவதற்கான வாய்ப்பே இல்லை” என்று அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு முடிவை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகிறது. இதனால் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் இல்லாமலேயே உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை