ஜஸ்பிரித் பும்ரா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் - பாட் கம்மின்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் உள்ள் ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், ஆஸ்திரேலிய அணியும் 104 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 46 ரன்கள் பின் தங்கியது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோரது சதங்கள் காரணமாக 487 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களையும், விராட் கோலி 100 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளைடினார்.
இதில் டிரவிஸ் ஹெட் 89 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 47 ரன்களையும், அலெக்ஸ் கேரி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனா; அந்த அணி 238 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியுள்ளது.
இப்போட்டி முடிவுக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன், “இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசினார் என்று நினைக்கிறேன். அவர் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரும் கூட. அவரை எதிர்கொள்வது எப்போதும் ஒரு சவாலாக இருக்கும். எனவே அவருக்கு எதிராக சிறப்பாக செயல்படும் வழியை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பாக முதல் நாள், அவரது பந்துவீச்சின் காரணமாக எங்களால் சரியாக ரன்களைச் சேர்க்க முடியவில்லை.
அவர் பெரும்பாலும் அடிக்க கடினமான பந்துகளையும் வீசினார். பெரும்பாலான ஆட்டங்களைப் போலவே இந்த ஆட்டத்திலும் அவர் திறனை வெளிப்படுத்தினார். அதேபோல் எங்கள் அணியின் முன்னணி வீரர்கள் பெரும்பாலானோர் சரியாக விளையாடவில்லை. அதனால் எங்கள் அணி பேட்டர்கள் வலைகளில் கடினமாக உழைத்து வருகின்றனர். குறிப்பாக மார்னஸ் லபுஷாக்னே தனது சிறுசிறு தவறுகளைக் கூட சரிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதனால் இந்த வாரம் முழுவதும் எங்கள் பயிற்சியாளர்களுடன் இணைந்து நாங்கள் நிறைய ஆலோசனை மேற்கொள்வதுடன், வித்தியாசமான என்ன செய்ய முடியும் என்பது குறித்து பேசவுள்ளோம். மேலும் இந்த தொடரை நாங்கள் எதிர்பார்த்ததை போல் எங்களால் தொடங்க முடியவில்லை. இந்த தோல்வி ஏமாற்றத்தை கொடுக்கிறது. நாங்கள் இதற்கு முன்னும் இதுபோன்ற சூழ்நிலையில் இருந்துள்ளோம். அதனால் அடுத்த போட்டியில் மீண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.