மிட்செல் மார்ஷ் மீண்டும் லெவனில் இடம்பிடிப்பார் என்று தோன்றவில்லை - ஆரோன் ஃபிஞ்ச்!

Updated: Wed, Jan 01 2025 22:13 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இதனால் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் திவீரமாக தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம்பிடிக்க மாட்டார் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “சிட்னி டெஸ்ட் போட்டியில் மிட்செல் மார்ஷ் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்று தோன்றவில்லை. ஏனெனில் அவர் பந்துவீசும் ஓவர்களை எடுத்துக் கொண்டால் அது மற்ற வீரர்களை விட மிகவும் குறைவாக உள்ளது. அதேசமயம் அவருடைய பேட்டிங் ஃபார்மும் இந்த தொடரில் பெரிதளவில் இல்லை. அவரது பேட்டிங் சராசரி 10 ரன்களாக இருக்கிறது. மேலும் அணியின் பயிற்சியாளரும் மிட்செல் மார்ஷின் ஃபார்ம் குறித்து கவலைபடுவதாகவும் நான் கேள்விப்பட்டேன். 

ஏனெனில் அணியின் ஆறாவது வரிசையில் களமிறங்கும் வீரரால் விளையாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் மார்ஷ் அதனை செய்ய தவறியுள்ளார். இருப்பினும் அணியின் வெற்றி காம்பினேஷனை மாற்றுவது சற்று கடினமான முடிவாக இருக்கும். ஆனால் அவர்கள் மிட்செல் மார்ஷை மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை, அவருக்கு பதில் பியூ வெப்ஸ்டர் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார். 

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை