சூப்பர் மேன் போல் பறந்து கேட்சைப் பிடித்த இங்கிலாந்து வீரர்; வைரல் காணொளி!
இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான டி20 பிளாஸ்ட் தொடரின் 2023 சீசனில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் சசக்ஸ் மற்றும் ஹேம்ப்ஷைர் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஹேம்ஸ்ஷைர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சசக்ஸ் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 183/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அலிவர் கார்ட்டர் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 64, ரன்களும் ரவி போபாரா 30 ரன்களும் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 184 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹேம்ப்ஷைர் அணிக்கு பென் மெக்டெர்மோட் 2, ஜேம்ஸ் வின்ஸ 8 என அதிரடி தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த டாபி ஆல்பர்ட் கோல்டன் டக் அவுட்டாகி சென்றார். போதாக்குறைக்கு ராஸ் வைட்லே 1 ரன்னில் நடையை கட்டியதால் 24/4 என சரிந்த அந்த அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும் 5ஆவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த ஜோ வேதர்லி 33 ரன்களில் அவுட்டானார்.
மேலும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட லியான் டாசன் அரை சதமடித்து வெற்றிக்கு போராடிய நிலையில் முக்கிய நேரத்தில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 59 ரன்கள் ஆட்டமிழந்தார். அதே போல அடுத்து வந்த பென்னி ஹோவல் தனது பங்கிற்கு 4 பவுண்டரியை பறக்க விட்டு 25 ரன்கள் எடுத்து சவாலை கொடுத்தார். குறிப்பாக டைமல் மில்ஸ் வீசிய 14ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் ஃபுல் ஷாட்டை அடித்த அவர் சிக்ஸர் பறக்க விட முயற்சித்தார்.
அதிரடியாக அவர் அடித்த வேகத்தில் பவுண்டரி செல்லும் அளவுக்கு வேகமாக சென்ற பந்தை டீப் ஸ்கொயர் பகுதியில் இருந்து வேகமாக ஓடி வந்த இங்கிலாந்து வீரர் பிராட்லி கர்ரி கவனத்தை சிதற விடாமல் சரியான சமயத்தில் சூப்பர் மேன் போல தாவி பிடித்து சிக்ஸரை தடுத்து வாய் மீது கை வைக்கும் அற்புதமான கேட்ச் பிடித்தார். குறிப்பாக சரியான சமயத்தில் பேலன்ஸ் செய்து தாவிய அவர் ஓடி வந்த வேகத்தில் காற்றிலேயே சூப்பர்மேனை போல பறந்து பந்தை பிடித்தார்.
அதை பவுண்டரி எல்லைக்குள் நின்று மிகவும் அருகில் பார்த்த ஒரு மைதான பராமரிப்பாளர் வாயை திறந்து என்ன ஒரு அற்புதமான கேட்ச் என்ற வகையில் பாராட்டிய நிலையில் இதர வீரர்களும் அவரை கட்டிப் பிடித்து கைதட்டி பாராட்டினர். மறுபுறம் அந்த நம்ப முடியாத செயல்பாடுகளை பார்த்து ஆச்சரியமடைந்த பேட்ஸ்மேன் வியப்புடன் பெவிலியன் நோக்கி அவுட்டாகி சென்றார்.
அதே போல மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்த நிலையில் இது வரலாற்றில் மிகவும் நம்ப முடியாத ஒரு கேட்ச் என வர்ணணையாளர்கள் நேரலையில் பாராட்டினர். அதே போல “இது வரலாற்றின் மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்று என தனது ட்விட்டரில் பாராட்டியுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அதை பிடிப்பதற்காக அவர் எவ்வளவு தூரம் ஓடி வந்தார் என்பதை பாருங்கள் ப்பா” என பதிவிட்டு வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.