இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி 3 டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சோபியா டங்க்லி - டேனியல் வையட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சோபியா டங்க்லி ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அலிஸ் கேப்ஸி ரன்கள் ஏதுமின்றி ரேனுகா சிங் பந்துவீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் டேனியல் வையட்டுடன் இணைந்த அனுபவ வீராங்கனை நாட் ஸ்கைவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. பின் இவரும் தங்களது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், மூன்றாவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 138 ரன்களைச் சேர்த்தனர்.
இதையடுத்து இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேனியல் வையட் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 75 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 13 பவுண்டரிகளுடன் 77 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் எமி ஜோன்ஸ் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களை சேர்த்து பினீஷிங் கொடுக்க, 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரேணுகா சிங் தக்கூர் 3 விக்கெட்டுகளையும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.