பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை பந்தாடியது பிரிஸ்பேன் ஹீட்!

Updated: Thu, Dec 07 2023 17:08 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பேஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் இன்று தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பிரிஸ்பேன் ஹீட் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு கேப்டன் உஸ்மான் கவாஜா - காலின் முன்ரோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய காலின் முன்ரோ தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் கேப்டன் உஸ்மான் கவாஜா 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே தனது பங்கிற்கு 30 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சாம் பில்லிங்ஸும் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த காலின் முன்ரோ சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 99 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்துள்ளது. மெல்போர்ன் அணி தரப்பில் ஜோயல் பேரிஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் குல்டர் நைல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அதன்படி அந்த அணியின் தாமஸ் ரோஜர்ஸ், சாம் ஹார்பர், ஜோ பர்ன்ஸ் 22, கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 23, மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 ரன்களுக்கு என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் களமிறங்கிய ஹில்டன் கார்ட்ரைட் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 33 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் மெல்போர்ன் அணி 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

பிரிஸ்பேன் அணி தரப்பில் மிட்செல் ஸ்வப்சன் 3 விக்கெட்டுகளையும், மைக்கேல் நேசர், ஸேவியர் பார்ட்லெட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த காலின் முன்ரோ ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை