பிபிஎல் 12: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
பிக் பேஷ் லிக்கின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாபர்ட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணியின் தொடக்க வீரர்கள் ஜோஷ் பிரௌன் ரன் ஏதுமின்றியும், உஸ்மான் கவாஜா 18 ரன்களிலும் அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே 28 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய மேட் ரென்ஷா - சாம் ஹைன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரென்ஷா 41 ரன்களில் ஆட்டமிழக்க, ஹைனும் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் பிரிஸ்பேன் ஹீட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. ஹாபர்ட் அணி தரப்பில் ரைலி மெரிடித், ஜோயல் பேரிஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹாபர்ட் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி விரர் பென் மெக்டர்மோட் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸாக் கிரௌலி 5 ரன்னிலும், கலெப் ஜெவெல் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் - டிம் டேவிட் இணை பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேட் 45 ரன்னிலும், டிம் டேவிட் 44 ரன்னிலும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
இதையடுத்து வந்த டி ஆர்சி ஷார்ட் 15 ரன்னில் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த வீரர்களாலும் இலக்கை அடிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.