அண்டர்சன் - பும்ரா இருவரும் அபாரமான பந்துவீச்சாளர்கள் - பென் ஸ்டொக்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்களைக் குவித்த நிலையில், இங்கிலாந்து அணி முதால் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலைப்பெற்றது.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் சதத்தின் மூலமாக 255 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 399 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினாலும், அதன்பின் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 292 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்துள்ளது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணி வெற்றிக்கு காரணமாக அமைந்த ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்ற்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “இந்த இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்னதாக எங்களால் இந்த இலக்கை எளிதில் எட்ட முடியும் என்றே நினைத்தோம். ஆனால் இறுதியில் இந்த போட்டி அதிக அழுத்தம் நிறைந்த போட்டியாக இருந்தது. இதுவும் ஒரு சிறந்த போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே எங்களது சில முக்கிய வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டனர்.
எங்கள் அணியில் இருப்பவர்கள் திறமையான வீரர்கள் என்பதால் நான் யாருக்கும் எந்த அலோசனையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. கடினமான சூழ்நிலைகளயும், தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வர முடியும் என்பதும் எங்களது வீரர்களுக்கு நன்றாகவே தெரியும். நேற்றைய தினம் எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்பட்ட விதம் நம்பமுடியாததாக இருந்தது. அவர்கள் தாங்கள் முதிர்ச்சியடைந்த வீரர்கள் என்பதை காட்டியுள்ளனர்.
அதேபோல் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டார், அதே போன்று தான் ஜஸ்ப்ரிட் பும்ராவும் மிக சிறப்பாக செயல்பட்டார். ஆண்டர்சன் மற்றும் பும்ரா இருவரும் அபாரமான பந்துவீச்சாளர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.