டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்; சாதனை படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Wed, Feb 07 2024 21:19 IST
டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்; சாதனை படைத்த ஜஸ்ப்ரித் பும்ரா! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்துமுடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 15 (முதல் டெஸ்ட் -06, இரண்டாவது டெஸ்ட் -09)விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜஸ்ப்ரித் பும்ரா 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் படித்துள்ளார்.

முன்னதாக, ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், நடந்துமுடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியிருந்தார் என்பதால் அவரது புள்ளிகள் சரிந்தது. இதையடுத்து அஸ்வின் மூன்றாவது இடத்துக்கு சரிய, ஜஸ்ப்ரித் பும்ரா முதலிடத்தை பிடித்தார். 

இதன்மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் சமீபத்தில் மறைந்த முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி ஆகியோர் மட்டுமே டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தனர். 

அவர்களைத் தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்களில் கடந்த 1979ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இரண்டாம் இடத்தையும், கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 3ஆம் இடத்தையும் பிடித்ததே சாதனையாக இருந்தது. அதனைத் தற்போது ஜஸ்ப்ரித் பும்ரா முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். 

அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியளிலும் முதலிடத்தைப் பிடித்த முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் வரலாற்று சாதனையையும் ஜஸ்ப்ரித் பும்ரா தன்வசமாக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை