பும்ரா முழு உடல் தகுதியுடன் உள்ளார்; ஆனாலும் அவருக்கு ஓய்வு தேவை - பிசிசிஐ!

Updated: Thu, Dec 29 2022 12:04 IST
Image Source: Google

ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தொடர் ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை தனித்தனியாக அறிவித்தது பிசிசிஐ. இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் இரண்டிலும் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை. டி20 உலககோப்பைக்கு முன்பாக காயமடைந்த பும்ரா தற்போது குணமடைந்துவிட்டார் என பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகாடமி அறிக்கையில் தெரிவித்தது. ஆனாலும் ஏன் அவரை எடுக்கவில்லை என்கிற கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது பிசிசிஐ தரப்பிலிருந்து அதற்கான தகவல்கள் வந்துள்ளது.

புதிய தேர்வுக்குழு நியமிக்க இன்னும் கால தாமதம் ஆவதால் ஏற்கனவே இருந்த சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவிற்கு இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் நடக்கவிருக்கும் தொடருக்கு இந்திய அணியை தேர்வு செய்ய பொறுப்பு கொடுக்கப்பட்டது.

டி20 உலக கோப்பையில் விளையாட வைப்பதற்காக ஆசியகோப்பை தொடரின்போது காயம் காரணமாக வெளியில் இருந்த பும்ராவை, குணமடைந்த உடனேயே அவசரமாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் நடந்த டி20 தொடரில் விளையாட வைத்தனர்.  துரதிஷ்டவசமாக தென் ஆப்பிரிக்கா தொடரின் போது மீண்டும் பும்ரா காயமடைந்து உலகக்கோப்பை தொடரிலிருந்து விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

பும்ரா போன்ற முக்கியமான வீரரை இழந்ததால் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது. மீண்டும் ஒருமுறை இந்த தவறு நடந்து விடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினர், பும்ரா குணமடைந்திருந்தாலும் இன்னும் சிலகாலம் அவர் ஓய்வில் இருக்கட்டும், பொருத்திருந்து விளையாட வைக்கலாம் என முடிவு செய்திருக்கிறது.

இதன் காரணமாகத்தான் பும்ரா விஷயத்தில் அவசரம் காட்டாமல் இலங்கை தொடரில் ஓய்வு கொடுத்துவிட்டு அடுத்து வரவிருக்கும் நியூசிலாந்து தொடரின் போது பும்ராவை விளையாட வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது பிசிசிஐ. நியூசிலாந்து தொடர் வருகிற ஜனவரி 18ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை