WTC Final: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸி; இந்தியாவுக்கு பின்னடைவு!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும், இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 68.52 சதவீத வெற்றிகளுடன் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. அதற்கு அடுத்ததாக 60.29 சதவீத வெற்றிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
நடைபெற்று முடிந்த இந்த மூன்றாவது டெஸ்ட்டை இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால் முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கலாம் தற்போது அந்த வாய்ப்பு தள்ளிச் செல்கின்றது. நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி அல்லது டிரா செய்தால் பைனலுக்குள் சென்றுவிடலாம்.
ஒருவேளை தோல்வியுரும் பட்சத்தில் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடியும். இந்த தருணத்தில், அடுத்ததாக நடைபெறவிருக்கும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை பொறுத்து இந்திய அணியின் தகுதி உறுதி செய்யப்படும்.
இலங்கை அணி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 53.33% வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இரண்டையும் இலங்கை அணி கைப்பற்றினால், அந்த அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
இந்திய அணி தனது 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியுறும் பட்சத்தில் இலங்கை அணி தகுதி பெற்றுவிடும். இந்திய அணி டிரா செய்தால் அல்லது வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். ஆகையால் அகமதாபாத் மைதானத்தில் மார்ச் 9ஆம் தேதி துவங்க உள்ள நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும்.