கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை - பாபர் ஆசாம்!

Updated: Wed, Dec 21 2022 09:48 IST
Captaincy not affecting my batting: Pakistan captain Babar Azam (Image Source: Google)

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பாகிஸ்தான் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறும் போது, “பாபர் ஆசம் கேப்டனாக பெரிய பூஜ்ஜியம் என்றும், முக்கியமாக அவருக்கு டெஸ்ட் அணியை வழிநடத்தும் திறன் இல்லை” என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், கேப்டன் பதவியால் எனது பேட்டிங் பாதிக்கப்படவில்லை என பாபர் ஆசம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை. சொல்லப்போனால் அழுத்தமான நேரங்களில் பேட்டிங் செய்வதை நான் அணுபவித்து விளையாடுவேன். கேப்டன் பொறுப்பு என்பது ஒரு மரியாதை. நான் எப்பொழுதும் எனது நாட்டுக்காக எனது சிறந்த செயல்பாட்டை அளிக்க நினைக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை முதலில் பாகிஸ்தான் தான், அதன் பின்னர் தான் மற்றவை. தோல்வி அடைந்தால் எனது அணி வீரர்களை நான் காப்பேன், நான் தோல்வி அடைந்ததற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன். எனது அணியினருக்கு முன் நான் இருப்பேன். டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்கும் நான் பொறுப்பேற்கிறேன்.

பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அணியை கட்டமைக்க சிறுது காலம் தேவை. டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள இளைஞர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். நாங்கள் இப்போது ஒரு டெஸ்ட் அணியை உருவாக்கும் கட்டத்தில் இருக்கிறோம், இது தான் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆறு அறிமுக வீரர்களுக்குக் காரணம்" என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை