ஐசிசி டி20 தரவரிசை: புதிய உச்சத்தை எட்டிய திலக் வர்மா, வருண் சக்ரவர்த்தி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதுல் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை மறுநாள் புனேவில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் தொடரும் நிலையில், இந்திய வீரர் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் ஒரு இடம் பின் தங்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேசமயம் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 4ஆம் இடத்திலும், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 5ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் இந்த தரவரிசைப் பட்டியலில் யஷஸ்வி ஜெஸ்வால் ஒரு இடம் பின் தங்கி 9ஆம் இடதிற்கும், ருதுராஜ் கெய்க்வாட் 2 இடங்கள் பின் தங்கியும் உள்ள நிலையில், இங்கிலாந்து தொடரில் சோபிக்க தவறிய சஞ்சு சாம்சன் 12 இடங்கள் பின் தங்கியும் 29ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேற்கொண்டு சர்வதேச டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸின் அகீல் ஹொசைன் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆதில் ரஷித் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேற்கொண்டு வநிந்து ஹசரங்கா, அடம் ஸாம்பா அகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இங்கிலாந்து டி20 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வருண் சக்ரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அதேசமயம் இத்தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சார் 13 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இதுதவிர்த்து அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல் ஆகியோர் 09,10,11ஆம் இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.