பாபர் ஆசாம் தான் எங்கள் அணியின் தொடக்க வீரர் - முகமது ரிஸ்வான் உறுதி!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இத்தொடருக்கு முன் இவ்விரு அணிகளும் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்று பெற்று சிறப்பான ஃபார்மில் உள்ளது.
அதேசமயம் பாகிஸ்தான் அணி அத்தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்த நிலையிலும், இறுதிப்போட்டியில் அந்த அணியால் வெற்றியைப் பதிவுசெய்ய முடியாமல் போனது. இதனால் அத்தோல்விகளுக்கு இப்போட்டியில் பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர். அதேசமயம் அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி வருவது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு பாபர் ஆசாம் தான் சரியான தேர்வு என அந்த அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பாபர் அசாம் கேப்டனாக இருந்தபோது, நாங்கள் ஐசிசி தொடர்களில் ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியை விளையாடினோம், ஆனால் தற்போது நாங்கள் அந்த ஒரு சதவீதத்தையும் பூர்த்தி செய்து சாம்பியன் பட்டத்தை அடைய முயற்சிக்கிறோம்.
சூழ்நிலைகளைப் பார்த்து, அணிக்கு எது சிறந்தது என்பதை ஆராய்ந்தால், நிச்சயம் பாபர் ஆசாம் தான் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். எங்களுக்கு வேறு வழியில்லாமல் இதனை நான் கூறவில்லை. எங்களிடம் தொடக்க வீரர் இடத்திற்கு நிறைய தேர்வுகள் இருக்கும் நிலையிலும், தற்போது அணியின் தொடக்க வீரர் இடத்திற்கு பாபர் ஆசாம் மிகச்சிறந்த தேர்வாக உள்ளார். மேலும் அவரும் அதனை விரும்புகிறார்.
எங்களுக்கு உண்மையான தொடக்க வீரர்கள் வேண்டும், ஆனால் அணியின் தேவைகளைப் பொறுத்தவரை, தொழில்நுட்ப ரீதியாக வலுவான பேட்ஸ்மேன் என்பதால் பாபர் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே அவர் தான் தற்போது எங்கள் அணியின் தொடக்க வீரர்” என்று தெரிவித்துள்ளார். உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பேட்டராக உள்ள பாபர் ஆசாம் இத்தொடரில் மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், ஃபகார் ஜமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தையாப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி.