சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட்!

Updated: Thu, Feb 06 2025 15:24 IST
Image Source: Google

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஆனால் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே அந்த அணி பின்னடைவை சந்தித்துள்ளது. 

அதன்படி அந்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகிய நிலையில், தற்சமயம் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி, “துரதிர்ஷ்டவசமாக பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கமாட்டார்கள். இந்த முடிவு எங்களுக்கு ஏமாற்றமளித்தாலும், உலக அளவிலான போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக சிறப்பாக செயல்பட மற்ற வீரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இருவரும் காயமடைந்தனர். இதில் ஜோஷ் ஹேசில்வுட் தொடரில் இருந்து பாதியிலேயே விலகிய நிலையில், பாட் கம்மின்ஸ் தொடர் முழுவதுமாக விளையாடினார். ஆனால் அதன்பின் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து இருவரும் விலகிய நிலையில், தற்போது இருவரும் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்தும் விலகியுள்ளனர். 

 

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் இன்றைய தினம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது அந்த அணிக்கு மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய வீரர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்வதுடன், அணியின் கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் ஆஸ்திரேலிய அணி தள்ளப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை