டெத் ஓவர்களில் எங்கள் செயல்திறன் சிறப்பாக இல்லை - முகமது ரிஸ்வான்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் கராச்சியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த வில் யங் மற்றும் டாம் லேதம் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், தங்கள் சதங்க்ளையும் பதிவுசெய்து அசத்தினர். இதில் டாம் லாதம் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 118 ரன்களையும், வில் யங் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 107 ரன்களையும் சேர்த்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய கிளென் பிலீப்ஸ் 61 ரன்களைச் சேர்க்க நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து, 321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சௌத் ஷகில் 6, முகமது ரிஸ்வான் 3, ஃபகர் ஸமான் 22 ரன்களில் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருப்பக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய பாபர் ஆசாம் அரைசதம் கடந்து 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் குஷ்தில் ஷா 69 ரன்களையும், சல்மான் ஆகா 42 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் மிட்செல் சான்ட்னர், வில்லியம் ஓ ரூர்க் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய டாம் லேதம் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான், “அவர்கள் மிகச் சிறந்த இலக்கை நிர்ணயித்ததாக நான் நினைக்கிறேன், அவர்கள் 320 ரன்கள் எடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியபோது 260 ரன்கள் தான் இலக்காக இருக்கும் என்று நினைத்தோம்.
ஆனால் வில் யங் மற்றும் டாம் லேதம் இணை சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து எங்கள் திட்டங்களை தகர்த்தனர். எங்கள் பந்துவீச்சாளர்கள் முயற்சி செய்த நிலையிலும் அவர்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய பிட்ச் எளிதாக இல்லை, ஆனால் வில் யங் மற்றும் லாதமின் இன்னிங்ஸ் மிக முக்கியமானவை. மேலும் இறுதி ஓவர்களில் எங்கள் செயல்திறன் சிறப்பாக இல்லை, அதனால்தான் அவர்களால் அந்த ஸ்கோரை எட்ட முடிந்தது. அதேசமயம் பேட்டிங்கில் எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. மேலும் ஃபகர் ஸமானின் காயம் குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
அவருக்கு கொஞ்சம் வலி உள்ளது.நாங்கள் டெத் பந்துவீச்சில் சொதப்பியதும், பேட்டிங்கில் சரியான தொடக்கத்தை பெறாததும் எங்களின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்த தோல்வி எங்களுக்கு பெரும் ஏமாற்றமளிக்கிறது, நாங்கள் அதை ஒரு சாதாரண போட்டியைப் போலவே விளையாடினோம். இப்போது போட்டி முடிந்துவிட்டது, மீதமுள்ளவற்றில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் அணி பிப்ரவரி 23ஆம் தேதி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.