பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங் நிரப்புவார் - ரிக்கி பாண்டிங்!

Updated: Wed, Feb 19 2025 09:01 IST
Image Source: Google

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிகெட் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

இதில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது அவர் காயமடைந்தார். 

அதன்பின் காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர் நிச்சயம் இத்தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கான மாற்று வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானாவுக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங் நிரப்புவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பும்ராவுக்கு ஏற்ற மாற்று வீரராக நான் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்வேன். அவர் தற்போது டி20 கிரிக்கெட்டில் எவ்வளவு சிறந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். 

நீங்கள் திறமையைப் பற்றி யோசித்துப் பார்த்தால், பும்ரா புதிய பந்து மற்றும் டெத் ஓவர்களில் செய்வது போன்ற திறமையை அர்ஷ்தீப் சிங்கும் பெற்றுள்ளார். அதைத்தான் தற்சமயம் இந்திய அணியும் எதிர்பார்க்கிறது. அதேசமயம் ஹர்ஷித் ராணாவையும் நான் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை. ஏனென்றால் அவரிடம் நிறைய திறமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன், மேலும் அவர் புதிய பந்தில் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் டெத் ஓவர்களை பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங்கின் அளவுக்கு ஹர்ஷித் ரானா சிறந்தவர் என்று நான் நினைக்கவில்லை. மேலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர், இடது கை புதிய பந்தில் பந்து வீசக்கூடியவர் மற்றும் புதிய பந்தை ஸ்விங் செய்ய கூடியவர் என்பதால் பெரிய போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் மிக முக்கியமானவராக இருப்பார். ஏனெனில் இத்தொடரின் பெரும்பாலான அணிகளில் நிறைய வலது கை பேட்டர்கள் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.ரிஸர்வ் வீரர்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, ஷிவம் தூபே

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை