சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறந்த ஃபீல்டருக்கான விருதை வென்றார் விராட் கோலி!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் - அக்ஸர் படேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அக்ஸர் படேல் 42 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 45 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்ததுடன் 81 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அந்த அணியின் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர்.
இதனால் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் சமீப காலங்களாக ஐசிசி தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய ஃபீல்டருக்கு தரப்பில் பயிற்சியாளர் தரப்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சிறந்த ஃபீல்டருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அணியின் உதவி பயிற்சியாளர் உடேனக நுவன் வழங்கி கௌரவித்தார்.
இதுகுறுத்து பேசிய திலிப், “நாங்கள் எப்போதும் அணியின் ஃபீல்டிங் துறை பற்றிப் அதிகம் பேசுகிறோம், எனக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் எவ்வாறு முன்கூட்டியே செயல்படுகிறீர்கள் என்பதுதான். இப்போட்டியில் வெவ்வேறு கட்டங்கள் இருந்தன என்று நான் நினைத்தேன்; அதிலும் டேரில் மிட்செல் உள்ளே வந்தபோது நாங்கள் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் அவரால் எளிதாக பேட்டிங் செய்ய முடியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகாளை பிடித்த ஃபீல்டர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்தார். முன்னதாக ராகுல் டிராவிட் 334 கேட்ச்சுகளை பிடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில் தற்போது விராட் கோலியும் 334 கேட்ச்சுகளை பிடித்து அவரின் சாதனையை சமன்செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.