நாங்கள் நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெற விரும்புகிறோம் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!

Updated: Fri, Feb 21 2025 10:17 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இதில் தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், நியூசிலாந்துடன் தோல்வியைத் தழுவிய கையோடு இத்தொடரை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஆஃப்கானிஸ்தான் அணியானது சமீப காலங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

இதனால் இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, தங்கள் முதல் ஐசிசி பட்டத்தை நோக்கி வெற்றியுடன் தொடங்குவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்த தொடரில் நாங்கள் வெறுமென பங்கேற்பதற்காக மட்டும் நாங்கள் இங்கு வரவில்லை. இந்தப் தொடரில் நாங்கள் நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெற விரும்புகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் நிறைய தரமான கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக நான் பார்க்கிறேன். ஏனென்றால் எங்கள் வீரர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், இந்த சூழ்நிலைகளும் எங்களுக்கு ஏற்றவை. எனவே எங்களுக்கும் வெற்றிபெற ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. 

நாளை முதல் இதைத் தொடங்குவோம், வெற்றியுடன் தொடங்குவோம், தொடர் முழுவதும் அதே வேகத்துடன் இருப்போம் என்று நம்புகிறோம்.சமீபத்தில் ஷார்ஜாவில் நாங்கள் தென் ஆப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளோம், அதனால் இப்போட்டியிலும் எங்களுக்கு அந்த நம்பிக்கை உள்ளது, எப்படியும் நாங்கள் அழுத்தத்தில் இல்லை. அதனால் இப்போது இந்த போட்டியில் நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துகிறோம். மேலும் எங்கள் அணி இந்த போட்டிக்கு தயாராக உள்ளது என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

ஆஃப்கானிஸ்தான் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கே), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ராம் அலிகில், இப்ராஹிம் ஸத்ரான், செதிகுல்லா அடல், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷித் கான், நங்யால் கரோட்டி, நூர் அஹ்மத், ஃபசல் ஹக் ஃபரூக்கி, நவீத் ஸத்ரான், ஃபரித் அஹ்மத் மாலிக்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை