ஐபிஎல் 2021: டூ பிளெசிஸ், ஜடேஜா அசத்தல்; ஆர்சிபிக்கு 192 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாப் டூ பிளெசிஸ் இணை களமிறங்கியது.
தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை பவர் பிளேவில் 51 ரன்களைச் சேர்த்தது. பின்னர் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெய்க்வாட் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னாவும் தனது பங்கிற்கு 24 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளெசிஸ் அரைசதம் கடந்த கையோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய ராயூடு - ரவீந்திர ஜடேஜா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராயூடு ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வந்த ஜடேஜா அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 62 ரன்களையும், பாப் டூ பிளேசிஸ் 50 ரன்களையும் சேர்த்தனர். ஆர்சிபி அணி தரப்பில் ஹர்செல் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.