கவுண்டி கிரிக்கெட்டில் சதம் விளாசிய புஜாரா!
இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி எனப்படும் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த 27ஆம் தேதி தொடங்கிய போட்டியில் சட்டேஷ்வர் புஜாரா தலைமையிலான சசெக்ஸ் அணியும், கிளவ்ஸ்டர்ஷயர் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கிளவ்ஸ்டர்ஷயர் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
அதன்படி களமிறங்கிய சசெக்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 455 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்தது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சசெக்ஸ் அணியின் கேப்டன் சட்டேஷ்வர் புஜாரா சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 20 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 151 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தவிர்த்து அந்த அணியின் அல்சொப் 67 ரன்களையும், ஜேம்ஸ் கோல்ஸ் 74 ரன்களையும், ஒலிவியர் கார்ட்டர் 59 ரன்களையும் சேர்த்து பங்களிப்பு செய்தனர். அடுத்த மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள நிலையில், சட்டேஷ்வர் புஜரா இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருவது இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.