இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக்கின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் - கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய கண்டி அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிஷங்கா 2 ரன்னிலும், ஆண்ட்ரே ஃபிளட்சர் ரன் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கமிந்து மெண்டிஸும் 23 ரன்களோடு நடையைக் கட்டினார். இதன்பின் ஜோடி சேர்ந்த ஆஷென் பண்டாரா - வநிந்து ஹசரங்கா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.

Advertisement

இதில் பண்டாரா 40 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, மறுமுனையில் வநிந்து ஹசரங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹசரங்கா 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 77 ரன்களை விளாசினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்தது. கொழும்பு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரஜிதா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய கொழும்பு அணியில் நிஷன் மதுசங்கா 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமல் - சரித் அசலங்கா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சண்டிமல் 38  ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சரித் அசலங்கா அரைசதம் கடந்ததுடன், 64 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரவி போபாரா - ஏஞ்சலோ மேத்யூஸ் இணை கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

Advertisement

இதன்மூலம் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்தில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரஜிதா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News