பேட்டிங்கில் போதிய ரன்களை எடுக்காததே தோல்விக்கு காரணம் - சாம் கரன்!

Updated: Mon, Apr 22 2024 11:54 IST
Image Source: Google

பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், நடு ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பியதால் 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 35 ரன்களையும், ஹர்ப்ரீத் பிரார் 29 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோய் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சஹா 13 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷுப்மன் கில் 35 ரன்களையும், சாய் சுதர்ஷன் 31 ரன்களையும் சேர்க்க, இறுதியில் அபாரமாக விளையாடிய ராகுல் திவேத்தியா 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரன், “ இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங்கில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். ஆனாலும் நாங்கள் பந்துவீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்டோம் என நினைக்கிறேன். இன்றைய போட்டி எங்கள் அணி வீரர்கள் போராடிய விதம் அருமையாக இருந்தாலும், அது எங்களுக்கு வெற்றிபெற போதியதாக இல்லை. குஜராத் அணியில் தலைசிறந்த ஆஃப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுடன் தமிழக வீரர் சாய் கிஷோரும் சிறப்பாக பந்து வீசினார். இந்த ஆடுகளத்தை நாங்கள் மூன்றாவது முறையாகப் பயன்படுத்துகிறோம், இங்கு 160 ரன்களுக்கு மேல் அடித்தால் வெற்றிக்கு வாய்ப்புகள் இருக்கும் என நினைத்தேன். அதற்காக நாங்களும் கடினமாக போராடினோம். பவர்பிளேயில் பிரப்ஷிம்ரன் நன்றாக விளையாடினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதன் பிறகு நாங்கள் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இப்போது என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியும், இனி வரும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை