பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது அர்த்தமற்ற ஒன்று - மிஸ்பா உல் ஹக்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 2022 ஆம் ஆண்டிற்கான ஐசிசி யின் சிறந்த ஒரு நாள் வீரர் மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான ஐசிசி யின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றிருக்கிறார் . மேலும் ஒரு நாள் போட்டிகளில் ஐசிசி யின் சிறந்த வீரராக தொடர்ந்து இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். கடந்த 2017 மற்றும் 18 ஆம் ஆண்டுகளில் விராட் கோலி ஐசிசி யின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான விருதை தொடர்ச்சியாக பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்தில் மட்டும் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளில் 2,600 ரன்கள் குவித்து இருக்கிறார் பாபர் . மேலும் ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள உள்ள அவர் அதில் எட்டு அரை சதங்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்ற வருடம் நடந்த ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியை இறுதிப்போட்டிக்கு தகுதி வரச் செய்தார்.
எப்போதுமே பாபர் அசாமை இந்திய அணியின் லெஜன்ட் விராட் கோலி உடன் ஒப்பீடு செய்து பார்ப்பது சர்வதேச கிரிக்கெட்டில் சில காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது . இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது அர்த்தமற்ற ஒன்று என்று தெரிவித்திருக்கிறார் .
இதுகுறித்து பேசியுள்ள அவர், “பாபர் அசாம் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையே ஒப்பீடு என்பது இருக்கக் கூடாது. விராட் கோலி நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளார் . ஆனால் பாபர் அசாம் தற்போது தான் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் உள்ளார் . பாபரும் விராட் கோலியை போன்று ஏராளமான கிரிக்கெட் ஆடியதும் இருவருக்கும் ஒப்பீடு செய்து கொள்ளலாம் .
தற்போது விராட் கோலிக்கு நிகரான வீரர்கள் உலகில் யாரும் இல்லை .ஆம், பாபர் ஒரு கிளாஸ் ப்ளேயர், அவர் எதிர்காலத்தில் விராட் கோலியை போன்றே சாதிக்க கூடும் . அப்போது நாம் இருவரையும் ஒப்பிட்டு பேசலாம் . ஆனால் இந்த நேரத்தில் பேசுவது அர்த்தமற்ற ஒன்று” என்று தெரிவித்துள்ளார் .
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் மற்றொரு முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறுகையில், “விராட் கோலியையும் பாபர் அசாமையும் ஒப்பீடு செய்வது வாசிம் அக்ரமையும் ஷாஹீன் அப்ரிதியையும் ஒப்பீடு செய்வது போன்றது” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.