சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த கார்பின் போஷ்!
Corbin Bosch Record: வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகள் எடுத்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 418 ரன்காளையும், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 167 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 369 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு 537 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 208 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 328 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் இளம் ஆல் ரவுண்டர் கார்பின் போஷ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பு சாதனை படைத்துள்ளார். அதன்படி அவர் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 100 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது தென் ஆப்பிரிக்க வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூன்று வீரர்கள் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார். அதன்படி கடந்த 1899 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஜிம்மி சின்க்ளேரும்,1910 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆப்ரி ஃபால்க்னரும், அதன்பின் 1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் 2002 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராகவும் என இரண்டு முறை ஜாக் காலிஸ் இந்த சாதனையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே டெஸ்டில் சதம் + 5 விக்கெட்டுகள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர்கள்
- ஜிம்மி சின்க்ளேர் (1899, இங்கிலாந்துக்கு எதிராக, கேப் டவுன்)
- ஆப்ரி பால்க்னர் (1910, இங்கிலாந்துக்கு எதிராக, ஜோகன்னஸ்பர்க்)
- ஜாக்ஸ் காலிஸ் (1999, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக, கேப் டவுன்)
- ஜாக்ஸ் காலிஸ் (2002, வங்கதேசத்திற்கு எதிராக, போட்செஃப்ஸ்ட்ரூம்)
- கார்பின் போஷ் (2025, ஜிம்பாப்வேக்கு எதிராக,புலவாயோ)
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகள் எடுத்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை கார்பின் போஷ் படைத்துள்ளார். முன்னதாக கடந்தாண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்காக அறிமுகமான கார்பின் போஷ் தனது முதல் போட்டியில் அரைசதம் கடந்ததுடன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.