சிபிஎல் 2024: ஆண்ட்ரே ரஸல் காட்டடி; வாரியர்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய கயானா அணிக்கு தொடக்க வீரர் டிம் ராபின்சன் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மற்ற டாப் ஆர்டர் விரர்கள் கெவின் சின்க்ளேர் 9, கேப்டன் ஷாய் ஹோப் 5, ஷிம்ரான் ஹெட்மையர் 7, மொயீன் அலி 11 ரன்களுக்கு என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதேசமயம் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிம் ராபின்சன்னும் 34 ரன்களுடன் நடையைக் கட்ட, பின்னர் களமிறங்கிய கீமோ பால் 3 ரன்களுக்கும், குடகேஷ் மோட்டி 5 ரன்களுக்கும் என நடையைக் கட்டினர். இதனால் 76 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து கயானா அணி தடுமாறியது. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரொமாரியோ ஷெஃபெர்ட் - டுவைன் பிரிட்டோரியர்ஸ் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் அரைசதம் கடந்து அசத்தினார்.
மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரொமாரியோ ஷெஃபெர்ட் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், டுவைன் பிரிட்டோரியஸ் 21 ரன்களையும் சேர்க்க, கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் மற்றும் வக்கார் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பேரிஸ் 29 ரன்களுக்கும், சுனில் நரைன் 11 ரன்களுக்கும், கேசி கார்டி 10 ரன்களுக்கும், நிக்கோலஸ் பூரன் 19 ரன்களுக்கும், கேப்டன் கீரன் பொல்லார்ட் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணியும் 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் மற்றும் ஆண்ட்ரே ரஸல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். மேலும் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களையும், டிம் டேவிட் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஆண்ட்ரே ரஸல் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.