சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்த ஃபால்கன்ஸ்!
கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணிக்கு ஃபகர் ஸமான் - ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன், முதல் விக்கெட்டிற்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து கொடுத்தனர்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்டின் க்ரீவ்ஸ் 37 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 38 ரன்களை எடுத்திருந்த ஃபகர் ஸமானும் தனது விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரோஷன் பிரிமஸ் 19 ரன்களுக்கும், ஜூவெல் ஆண்ட்ரூ 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த இமாத் வசீம் - ஃபேபியன் ஆலன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இமாத் வசீம் 46 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபேபியன் ஆலன் 25 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்தாலும், 176 ரன்களை சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன், வக்கர் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஆண்டிரிஸ் கௌஸ் - பேரிஸ் இணை அதிரடியாக விளையாடும் முயற்சியில் இறங்கினர். இதில் பாரிஸ் 31 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ரன்கள் ஏதுமின்றியும், ஆண்ட்ரிஸ் கஸ் 39 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேசி கார்டி - கேப்டன் கீரன் பொல்லார்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பொல்லார்ட் 30 ரன்களுக்கும், கேசி கார்டி 34 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் நைட்ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஃபால்கன்ஸ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Also Read: Funding To Save Test Cricket