சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி!

Updated: Thu, Aug 03 2023 20:06 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட்டில் எல்லாவித திறமைகள் இருந்தும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் போன பலவீரர்கள் இருக்கிறார்கள். சமீபகால உதாரணமாக ஷிகர் தவான் இருக்கிறார். ஆனால் இவருக்காவது தேவைப்பட்ட அளவுக்கு வாய்ப்புகள் கிடைத்த பின்பு புறக்கணிக்கப்பட்டார். ஆனால் இவரை விட மிகவும் பரிதாபத்துக்குரிய ஒரு வீரர் இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறார்.

அவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி. மொத்தம் எட்டு ஆண்டுகளில் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு 15 போட்டிகள் மட்டுமே. இதில் ஒருநாள் போட்டியில் ஒரு முறை சதம் அடித்திருக்கிறார், மேலும் பந்துவீச்சில் லெக் ஸ்பின்னர் ஆக ஒரே போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இப்படி இருந்தும் கூட மகேந்திர சிங் தோனி கேப்டன்சி காலத்தில் ஒதுக்கப்பட்டார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய இவருக்கு கடைசி போட்டியாக 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி அமைந்தது. ஏறக்குறைய இந்த எட்டு ஆண்டுகளில் இவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு என்பது வெறும் 12 போட்டிகளில் மட்டுமே. இதற்கு நடுவில் இவருக்கு இந்திய டி20 அணியில் மூன்று வாய்ப்புகள் தரப்பட்டது. 12 ஒரு நாள் போட்டிகளில் 287 ரன்கள், ஒரு சதம் மற்றும் அரை சதம் அடித்திருக்கிறார். சிறந்த பந்துவீச்சாக நான்கு விக்கெட்டுகள் இலங்கைக்கு எதிராக கைப்பற்றி இருக்கிறார்.

மேலும் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அணிக்கு தேவைப்படும் நேரத்தில் சில ஓவர்களை வீசக்கூடியவராகவும் விக்கெட் வீழ்த்தக் கூடியவராகவும் இருந்திருக்கிறார். இந்திய அணிக்கு ஒரு லெக் ஸ்பின் ஆல்ரவுண்டர் என்பது அரிதான விஷயம். அப்படி இருந்தும் இவரை கூர்மைப்படுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பாமல் விட்டுவிட்டது.

இதற்குப் பிறகு தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடிய இவர், மேற்குவங்க அணியை இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இந்த நிலையில் தற்போது தனது 37ஆவது வயதில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். மேலும் முக்கிய விஷயமாக மேற்கு வங்கத்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு அந்த மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அவர் தனது ஓய்வு அறிக்கையில், “கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறேன். கிரிக்கெட் எனக்கு அனைத்தையும் கொடுத்தது. எனது வாழ்வில் நான் கடினமான சூழலில் இருந்தபோது எனக்கு கனவிலும் நினைக்காதவற்றை எனக்கு இந்த கிரிக்கெட் கொடுத்தது. நான் கிரிக்கெட் மற்றும் கடவுளுக்கு எப்போதும் நன்றிக் கடன் பட்டிருப்பேன். இந்த பயணம் முழுவதும் கடவுள் எனக்கு உறுதுணையாக இருந்தார்” எனப் பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::