ஹர்ஷல் படேலை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - இர்ஃபான் பதான்!

Updated: Sat, Dec 09 2023 19:13 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்துள்ளது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரானது தோனிக்கு கடைசி தொடர் என்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் 2024ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளிலும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கெடுவித்திருந்தது. அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அந்த வகையில் சென்னை அணியில் இருந்து மொத்தமாக எட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் அம்பத்தி ராயுடு மட்டும் ஓய்வினை அறிவித்து வெளியேறியுள்ளார். அவரை தவிர்த்து வெளிநாட்டு வீரர்களாக பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், கைல் ஜேமிசன், சிஸாண்டா மஹாலா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்திய வீரர்களாக பகத் வர்மா, சுப்ரன்ஷு சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை அணி அடுத்த சீசனுக்கான ஏலத்தில் ஆறு வீரர்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் அதில் மூன்று வெளிநாட்டு வீரர்களையும், மூன்று இந்திய வீரர்களையும் தேர்வு செய்ய சென்னை அணிக்கு உரிமை உள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் வெளியேறியுள்ளதால் 31 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கப்போகும் ஒரு வீரர் குறித்து பேசிய இர்ஃபான் பதான், “பெங்களூரு அணியிலிருந்து ஒரு வீரர் நிச்சயம் சென்னை அணிக்கு மாற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சிஎஸ்கே அணியில் தீபக் சஹார் போன்ற அடிக்கடி காயமடையும் பல வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். எனவே ஒரு நிலையான வீரர் அவர்களுக்கு அவசியம் தேவை.

அதன் காரணமாக ஹர்ஷல் படேலை சென்னை அணி ஏலத்தில் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பெங்களூரில் இருந்து சென்னை வெகு தொலைவில் இல்லை. எனவே 5 மணிநேர சிறிய சவாரியின் மூலம் ஹர்ஷல் பட்டேலை அவர்கள் அழைத்துச் செல்வார்கள் என்று நினைப்பதாக” கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை