ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒருவர் விலகல்; இலங்கை வீரர் சேர்ப்பு!

Updated: Thu, Apr 21 2022 17:53 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது பாதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட பாதி அணிகள் 7 போட்டிகளில் ஆடியுள்ளன. இதுவரை 32 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு டி.ஒய். பாட்டீடல மைதானத்தில் நடைபெறும் 33-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் துவங்கியது முதல் தோனி தலைமையிலான சென்னை அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணிக்கும் தான் ரசிகர்கள் அதிகம். இதனால் இந்த இரு அணிகள் மோதும்போது, பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மும்பை அணி. இதேபோல், 4 முறை கோப்பை வென்றுள்ளது சென்னை அணி.

அதிக முறை கோப்பைகளை வென்ற இந்த இரு அணியும், இந்த ஆண்டு சீசனில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நடப்பு தொடரை படுதோல்வியுடன் துவங்கிய சென்னை அணி, தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்தது.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில், வழக்கம் போல் பெங்களூர் அணி, சென்னை அணிக்கு ஒரு வெற்றியை கொடுத்தது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியுடனான அடுத்த போட்டியில் மீண்டும் தோல்வியை சந்தித்தது.

மறுபுறம் மும்பை அணியோ 6 போட்டிகளில் அனைத்திலுமே தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது. இந்த இரு அணிகளுமே நல்ல பிளேயரை தக்கவைத்துக்கொள்ளாததும், பந்துவீச்சில் சொதப்புவதும் தோல்விக்கு காரணமாக உள்ளது. மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யா இல்லாதது, சென்னை அணியில் டூ பிளசிஸ், ரெய்னா போன்ற வீரர்கள் இல்லாதது பலவீனமாக கருதப்படுகிறது.

ஆனால், ஹர்திக் பாண்டியா மற்றும் டூ பிளெசிஸ் இருவரும் முறையே, குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளின் கேப்டன்களாக இருந்து அணிக்கு வெற்றிவாகை சூடிதருகின்றனர். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு காயம் காரணமாக தீபக் சாஹர் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில், தற்போது சென்னை அணியில் இருந்து மற்றொரு வீரரும் விலகியுள்ளார்.

சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த சீசனில் இனி வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் ரூ 1.90 கோடிக்கு சென்னை அணி இவரை ஏலத்தில் எடுத்திருந்தது. இவருக்கு மாற்று வீரராக 19 வயதுடையோருக்கான உலக கோப்பையில் விளையாடிய இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீசா பதிராணா சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் .

இதேபோல், அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன நியூசிலாந்து அணியின் டெவன் கான்வேவிற்கு, இந்த தொடரில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. முதல் போட்டியில் சொதப்பியதால் அவரை அணியில் இருந்து நீக்கிய சென்னை அணி, ராபின் உத்தப்பாவை துவக்க வீரராக களமிறக்கி வருகிறது. இந்நிலையில், டெவன் கான்வே ஓரிரு போட்டிகளில் இருந்து விலகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டெவன் கான்வேவிற்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளதால், அவர் நியூசிலாந்து செல்ல உள்ளதாகவும், இதனால் டெவன் கான்வே அடுத்த ஓரிரு போட்டிகளுக்கான சென்னை அணியில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வாரத்திற்கு பிறகு கான்வே சென்னை அணியில் இணைந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் கரோனா காரணமாக மற்றும் பல்வேறு பிரச்சனைகளால், சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் விலக, அந்த ஆண்டு அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல், சூபபர் லீக் போட்டியில் படு தோல்வியை சந்தித்து, முதல் அணியாக வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருந்தது. 

தற்போது இந்த ஆண்டும் சென்னை அணி வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேறுவதால் மிச்சமுள்ள போட்டிகளை அந்த அணி எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது மும்பை மற்றும் சென்னை அணி புள்ளிப்பட்டியில் கடைசியில் அடுத்தடுத்து உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை