தோனியை தக்கவைக்க சிஎஸ்கே போட்ட திட்டம்; ஆதரவு தெரிவிக்க மறுத்த மற்ற அணிகள்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.
ஏனெனில் தற்சமயம் 41 வயதை எட்டியுள்ள அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருடனே ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலும் அவர் சிஎஸ்கேவிற்காக விளையாடுவார் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு அணியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்கள் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைப்பதற்காக, ஐபிஎல் விதிகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில், ஐபிஎல் முதல் சீசன் தொடங்கிய 2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய விதிமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவர சிஎஸ்கே அணி வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தால், அவரை அன்கேப் வீராக கருத்தில் கொள்ளப்படுவார் என்ற விதிமுறை ஐபிஎல் தொடரின் முதலாவது சீசன் துவங்கியதில் இருந்தே அமலில் இருந்து வந்தது.
ஆனால் அந்த விதிமுறையானது கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் தான் சிஎஸ்கே அணி பழைய விதிமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவர வேண்டும் என ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இந்த விதிமுறையானது மீண்டும் அமலுக்கு வந்தால், அதனை பயன்படுத்தி மகேந்திர சிங் தோனியை ரூ.4 கோடிகளிலேயே சிஎஸ்கே அணியால் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது மகேந்திர சிங் தோனியை சிஎஸ்கே அணி நிர்வாகம் ரூ. 12 கோடிக்கு தக்கவைத்துக்கொண்டது. அதனைத் தவிர்க்கவே இம்முறை சிஎஸ்கே அணி முயன்று வருதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்டகாலம் விளையாடி வரும் வீரர்களுக்கு அன்கேப் அந்தஸ்தை வழங்குவதற்கு மற்ற ஐபிஎல் அணிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.