ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 2 ரன்களுடன் நடையைக்கட்ட, அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மாவும் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் பிலீப்ஸின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தர். இதனால் இந்திய அணி 30 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஸர் படேல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 98 ரன்களை எட்டிய நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அக்ஸர் படேல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ஸ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 79 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

பின் கேஎல் ராகுல் 23 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்னிலும் என ஆட்டமிழக்க, மறுமுனையில் இறுதிவரை போராடிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையு, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வில் யங்குடன் இணைந்த கேன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் வில் யங் 23 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செல் 17 ரன்னிலும், டாம் லேதம் 14 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். அதேசமயம் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் பிலீப்ஸ் 12 ரன்னிலும், மைக்கேல் பிரேஸ்வெல் 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த கேன் வில்லியம்சனும் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

பின் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 28 ரன்களில் மிட்செல் சாண்டர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News