பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Advertisement

இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வில் யங் 21 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்த கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ரவீந்திரா மற்றும் வில்லியம்சன் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

அதன்பின் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 108 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் கேன் வில்லியம்சனும் தனது சதத்தைப் பூர்த்தி செய்திருந்த நிலையில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 102 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய டாம் லேதம் 4 ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் - கிளென் பிலீப்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிய டேரில் மிட்செல் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இறுதியில் கிளென் பிலீப்ஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியை இமாலய இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 49 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களைச் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கெல்டன் 17 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் பவுமாவுடன் இணைந்த ரஸ்ஸி வேன்டர் டூசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

Advertisement

பின் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களைச் சேர்த்த நிலையில் டெம்பா பவுமா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ரஸ்ஸி வேன்டர் டுசெனும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசெனும் 3 ரன்களில் மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரமும் 31 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வியான் முல்டர், மார்கோ ஜான்சன் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருமுறையில் விக்கெட்டுகள் இழந்த நிலையில் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் இறுதிவரை களத்தில் இருந்ததுடன் 10 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 67 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்தார். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இதையடுத்து மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News