ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில்  குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெவான் கான்வே 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 10 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 73 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த வில் யங் மற்றும் டாம் லேதம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடி வந்த வில் யங் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய டாம் லேதமும் அரைசதம் கடக்க, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 120 ரன்களைக் கடந்தது. அப்போது சதமடித்து அசத்திய வில் யங் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 107 ரன்க்ளைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய கிளென் பிலீப்ஸும் வழக்கம்போல் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் லேதம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கிளென் பிலீப்ஸ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இறுதியில் அதிரடியாக விளையாடி வந்த கிளென் பிலீப்ஸ் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் லேதம் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 115 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசாம் மற்றும் சௌத் ஷகீல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சௌத் ஷகீல் 6 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் முகமது ரிஸ்வானும் 3 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் - ஃபகர் ஸமான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஃபகர் ஸமான் 24 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய சல்மன் ஆகாவும் அதிரடியாக விளையாடிய நிலையில் அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடாங்கியது. 

Advertisement

இதில் அரைசதத்தை நெருங்கில் சல்மான் ஆகா 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 42 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தயாப் தாஹிரும் ஒரு ரன்னுடன் நடைடைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 64 ரன்களைச் சேர்த்த கையோடு பாபர் ஆசாமும் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய குஷ்தில் ஷா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசத்தையும் கடந்தார். அதன்பின் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 69 ரன்களை எடுத்திருந்த நிலையில் குஷ்தில் ஷாவும் தனது விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஷாஹீன் அஃப்ரிடி 14, நசீம் ஷா 13 மற்றும் ஹாரிஸ் ராவுஃப் 19 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வில்லியம் ஓ ரூர்க் மற்றும் கேப்டன் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News