CT2025: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; கம்மின்ஸ், ஹேசில்வுட் தேர்வு!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் எட்டு அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து இத்தொடரை எதிர்கொள்கின்றனர்.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை கிரிக்கெட் அஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது. இதில் காயம் காரணமாக இலங்கை தொடரில் இடம்பிடிக்காமல் இருந்த பாட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் பார்டர் கவாஸ்கர் தொடரின் போது காயத்தை சந்தித்த ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.
மேற்கொண்டு பிக் பேஷ் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மேத்யூ ஷார்ட், ஆரோன் ஹார்டி ஆகியோருடன் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள மிட்செல் மார்ஷுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சமீப காலங்களில் ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க்கின் மோசமான ஃபார்ம் காரணமாக இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை
- பிப்ரவரி 22 - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, லாகூர்
- பிப்ரவரி 25 - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, ராவல்பிண்டி
- பிப்ரவரி 28 - ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான், லாகூர்