ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியில் அயர்லாந்து - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்ச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
இதில் ஆண்டி மெக்பிரைன் 20 ரன்களிலும், பால் ஸ்டிர்லிங் 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஆண்டி பால்பிர்னியும் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடிய லோர்கன் டக்கர் 26 ரன்களுடன் நடையைக் கைட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹேரி டெக்டர் - ஜார்ஜ் டக்ரெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
அதன்பின் 52 ரன்களுக்கு ஹேரி டெக்டர் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜ் டக்ரேல் 91 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய கரெத் டெலானி 20, மார்க் அதிர் 15, கிராஹம் ஹூம் 15 ரன்களைச் சேர்க்க அயர்லாந்து அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்களைச் சேர்த்தது. ஓமன் அணி தரப்பில் பிலால் கான, பட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணிக்கு காஷ்யப் பிரஜாபதி - ஜதீந்தர் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜதீந்தர் சிங் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து பிரஜாபதியுடன் இணைந்த அகிப் இலியாஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 52 ரன்களில் அகிப் இலியாஸ் ஆட்டமிழக்க, 72 ரன்களில் பிரஜாபதியும் ஆட்டமிழந்தார். இதையடுத்து இணைந்த கேப்டன் ஜீஷன் மக்சூத் - முகமது நதீம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இதில் அரைசதம் அகடந்த ஜீஷன் மக்சூத் 59 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அயான் கானும் 29 ரன்களுக்கு நடையைக் கட்டினார். ஆனால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது நதீம் 46 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஓமன் அணி 48.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.