ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆரோன் ஜோன்ஸ் சிக்ஸர் மழை; கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி!

Updated: Sun, Jun 02 2024 09:36 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தில் 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கிவுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெற்ற லீக் சுற்றின் முதல் போட்டியில் குரூப் ஏ குழுவில் இடம்பிடித்துள்ள தொடரை நடத்தும் அமெரிக்க அணியும், கனடா அணியும் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரேரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய கனடா அணிக்கு ஆரோன் ஜான்சன் - நவ்நீத் தலிவால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். அதிலும் இப்போட்டியை பவுண்டரி அடித்து தொடங்கிவைத்த ஆரோன் ஜான்சன் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பர்காத் சிங் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் கனடா அணி 66 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் இணைந்த நவ்நீத் தலிவால் - நிக்கோலஸ் கிர்டன் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நவ்நீத் தலிவால் அரைசதம் கடந்து அசத்தியதுடன், டி20 உலகக்கோப்பை தொடரில் கனடா அணிக்காக அரைசதம் கடந்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்தார். அதன்பின் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்த நிலையில் நவ்நீத் தலிவால், கோரி ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் கிர்டன் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் மொவ்வா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைக் குவித்தது. அமெரிக்க அணி தரப்பில் கோரி ஆண்டர்சன், அலி கான், ஹர்மீத் சிங் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிரடி தொடக்க வீரர் ஸ்டீவன் டெய்லர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் கேப்டன் மோனாங்க் படேலுடன் இணைந்த ஆண்ட்ரிஸ் கஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் இணைந்து 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் மொனாங்க் படேல் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதனைத்தொடர்ந்து ஆண்ட்ரிஸ் கஸுடன் இணைந்த ஆரோன் ஜோன்ஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் கனடா அணி பந்துவீச்சை சிதறடித்து சிக்ஸர் மழை பொழிந்தார். இப்போட்டியில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஆரோன் ஜோன்ஸ் 22 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்து மிரட்டினார். அவருக்கு துணையாக ஆண்ட்ரிஸ் கஸும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியின் வெற்றியையும் உறுதிசெய்து அசத்தினார். பின்னர் இறுதிவரை களத்தில் இருந்து ஆட்டத்தை முடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரிஸ் கஸ் 65 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் மறுமுனையில் தனது அதிரடியைக் கைவிடாத ஆரோன் ஜோன்ஸ் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 94 ரன்களைக் குவித்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அமெரிக்க அணி 17.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தும் அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை