CWCL 2: மேக்ஸ் ஓடவுட், கைல் கெலின் அபாரம்; அமெரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து!

Updated: Wed, Aug 21 2024 22:21 IST
Image Source: Google

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் மைக்கேல் லெவிட் - மேக்ஸ்  ஓடவுட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல் லெவிட் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ் ஓடவுட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 18 ரன்களுக்கும், முஸா அஹ்மத் 5 ரன்களுக்கும், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 2 ரன்களுக்கும், நோஹா கிராஸ் 27 ரன்களுக்கும், கைல் கெலின், ஆர்யன் தத், கிளேட்டன் ஃபிலாய்ட் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ் ஓடவுட் 77 ரன்களில் ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணியானது 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அமெரிக்க அணி தரப்பில் நோஸ்துஷ் கென்ஜிகே, ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்க அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்படி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஸ்டீவன் டெய்லர் ரன்கள் ஏதுமின்றியும், சமித் படேல் 3 ரன்களுக்கும், ஆரோன் ஜோன்ஸ் 8 ரன்களுக்கும், மிலிந்த் குமார் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் மொனாங்க் படேல் - ஷயான் ஜஹாங்கீர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஷயான் ஜஹாங்கீர் 20 ரன்கள் எடுத்திருந்தந் இலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் மொனாங்க் படேல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

பின்னர் மொனாங்க் படேல் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 66 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அபிஷேக் பரத்கர், ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக், நோஸ்துஷ் கென்ஜிகே ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனாம் அமெரிக்க அணியானது 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் கைல் கெலின் 4 விக்கெட்டுகளையும், பால் வான் மீகெரன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம் நெதர்லாந்து அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை