வீடு திரும்பிய வார்னர்; மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
பயோ பபுள் பாதுகாப்பு சூழலில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில், வீரர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் தனி விமானம் மூலம் சொந்த நாடுகளுக்கு திரும்பினர்.
இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டு, தற்போது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். அங்கும் அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் வீடு திரும்பியுள்ள ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் குறித்து அவரது மனைவி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,“இந்தியாவிலிருந்து டேவிட் வார்னர் வீடு திரும்பியுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில் நாங்கள் அவரைப் பிரிந்து இருந்தது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் எனது பிள்ளைகள் தற்போது உணரும் வயதில் இருந்ததால், அவர்கள் இச்சூழலை புரிந்து நடந்து கொள்ள முடிந்தது.
மேலும் இந்தியாவில் நிலவிவரும் மோசமான சூழலில் நாங்கள் மிகவும் பயத்துடன் இருந்தோம். தற்போது அவர் எந்த பிரச்சனையும் இன்றி வீடு திரும்பியுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.