பந்து வீச்சாளர்களை பாராட்ட வேண்டும் - ரஜத் பட்டிதார்!
ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முல்லன்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஆர்சிபி அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 33 ரன்களையும், ஷஷாங்க் சிங் 31 ரன்களையும், மார்க்கோ ஜான்சென் 25 ரன்களையும் சேர்த்தனர். ஆர்சிபி தரப்பில் சுயாஷ் சர்மா மற்றும் குர்னால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 73 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 61 ரன்களையும் சேர்த்ததன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ராஜத் படிதார், “பந்து வீச்சாளர்களையே பாராட்ட வேண்டும். தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி இருவரும் எங்களுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்தினர். பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு கட்டங்களில் சிறப்பாக செயல்பட்டனர், அவர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதம் அருமையாக இருந்தது. விக்கெட் சற்று மெதுவாக இருந்ததால் இறுக்கமான பந்து வீச்சுகளை வீச வேண்டியிருந்தது.
Also Read: Funding To Save Test Cricket
அதுதான் அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் எங்களுடைய செய்தியாக இருந்தது. மேலும் நாங்கள் எங்கள் பீல்டிங் குறித்து அதிகம் பேசினோம். மேலும் அதற்கான அனைவரும் தீவிர பயிற்சிகளையும் மேற்கொண்டிருந்தனர். அதனால் இன்று நாங்கள் ஃபீல்டிங்கில் சிறப்பாக இருந்தோம். அடுத்த போட்டியை நாங்கள் பெங்களூருவில் விளையாடவுள்ளோம் என்பதால், நான் அங்கு டாஸ் வெல்ல விரும்புகிறேன். எங்கள் சொந்த மைதானத்தில் எங்கள் தவறுகளை சரிசெய்ய முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.