சதமடித்து சாதனைகள் படைத்த டெவால்ட் பிரீவிஸ்!
Dewald Brevis Record: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரீவிஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியானது 53 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. மேலும் இந்த போட்டியில் சதமடித்து அசத்திய தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரீவிஸ் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெவால்ட் பிரெவிஸ் சதமடித்து அசத்தியதுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, தென்னாப்பிரிக்காவிற்காக டி20 வடிவத்தில் சதம் அடித்த இளம் வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் அந்த அணியின் முன்னாள் வீரர் குயின்டன் டி காக் பெயரில் இந்த சாதனை இருந்த நிலையில், தற்போது டெவால்ட் பிரீவிஸ் புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஹாஷிம் அம்லாவின் சாதனை முறியடிப்பு
இதுதவிர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 சர்வதேச போட்டியில் மிகப்பெரிய இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் ஹாஷிம் அம்லா கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 97 ரன்களை அடித்ததே சாதனையக இருந்த நிலையில், தற்போது பிரீவிஸ் அதனை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20யில் அதிக ஸ்கோர் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர்
- டெவால்ட் பிரெவிஸ் - 125* ரன்கள்
- ஹஷிம் ஆம்லா - 97* ரன்கள்
குயின்டன் டி காக் சாதனை முறியடிப்பு
இந்த போட்டியில் டெவால்ட் பிரீவிஸ் 41 பந்துகளில் சதமடித்ததன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிவேக சதமடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் குயின்டன் டி காக் 43 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்த நிலையில், அதனை பிரீவிஸ் முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்காக அதிவேகமாக சதமடித்த வீரர்கள்
- டேவிட் மில்லர் - வங்கதேசத்திற்கு எதிராக 35 பந்துகள்
- டெவால்ட் பிரெவிஸ் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 41 பந்துகள்
- குயின்டன் டி காக் - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 43 பந்துகள்
இந்தா போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 125 ரன்களைச் சேர்த்தார். அவரைத்தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவற, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 218 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷூயிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் 50 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்றவர்கள் சோபிக்க தவறினர். ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்கா தரப்பில் குவேனா மபாகா, கார்பின் போஷ் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி வெற்றியைப் பதிவுசெய்தது.