இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு கலைக்கப்பட்டு உபுல் தரங்கா தலைமையிலான புதிய தேர்வு குழு உருவாக்கப்பட்டது.
இதையடுத்து இலங்கை அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி ஒருநாள் அணிக்கு குசல் மெண்டிஸ் கேப்டனாகவும், டி20 அணிக்கு வநிந்து ஹசரங்கா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். மேலும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு சரித் அசலங்கா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டனாக திமுத் கருணாரத்னாவே தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் இலங்கை அணியின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.