IND A vs AUS A 1st Test: துருவ் ஜூரெல் சதம்; இந்திய ஏ அணி கம்பேக்!

Updated: Thu, Sep 18 2025 21:25 IST
Image Source: Google

IND A vs AUS A 1st Test: ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வீரர் துருவ் ஜூரெல் சதமடித்து அசத்தியதுடன், 113 ரன்களைச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி லக்னோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 532 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ் பிலீப் 18 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 123 ரன்களையும், சாம் கொன்ஸ்டாஸ் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 109 ரன்களைச் சேர்த்தனர். இந்திய ஏ அணி தரப்பில் ஹர்ஷ் தூபே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களைச் சேர்த்திருந்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜெகதீசன் 50 ரன்களுடனும், சாய் சுதர்ஷன் 20 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். 

இதில் ஜெகதீசன் 64 ரன்னிலும், சாய் சுதர்ஷன் 73 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களுடனும் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் - துருவ் ஜுரெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் இந்திய ஏ அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 403 ரன்களைச் சேர்த்துள்ளது.

Also Read: LIVE Cricket Score

இதில் துருவ் ஜூரெல் 113 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 86 ரன்களுட்னும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சேவியர் பார்ட்லேட், கோரி ரோச்சிசியோலி, லியாம் ஸ்காட், கூப்பர் கனொலி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 129 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய ஏ அணி நாளை கடைசி நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை