T20 WC 2024: உகாண்டாவை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய உகாண்டா அணிக்கு ரோனக் படேல் - சைமன் செசாஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைமன் செசாஸி மற்றும் ராபின்சன் ஒபியா ஆகியோர் டிரெண்ட் போல்ட்டின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அல்பெஷ் ரம்ஜானியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ரோனக் படேலும் 2 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார் இதைத்தொடர்ந்து களமிறங்கிய கே வைஸ்வா 11 ரன்களையும், ரியாசத் அலி ஷா 2 ரன்களுக்கு, தினேஷ் நக்ரானி 4 ரன்களுக்கும், அசெல்லம் 9 ரன்களுக்கும், ஜுமா மியாக்கி ரன்கள் ஏதுமின்றியும், காஸ்மஸ் கியூட்டா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனல் உகாண்டா அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். ஆனால் இதில் டெவான் கான்வே 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்ததிருந்தார்.
அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரச்சின் ரவீந்திரா 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணியானது 5.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இருப்பினும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.