ENG vs IND, 1st Test Day 1 : நிதான ஆட்டத்தில் இந்தியா!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல் நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அரைசதம் அடித்திருந்த ஜோ ரூட் 64 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற பின்னர் வந்த வீரர்களும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் மூலம் இங்கிலாந்து 183 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிரைவு செய்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் - ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்கம் தந்தனர். இதில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா - கே.எல்.ராகுல் இருவரும் தலா 9 ரன்களுடன் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர்.